‘சூரரை போற்று இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பெரிய சல்யூட்’: கேப்டன் கோபிநாத் நெகிழ்ச்சி…!!

396

சூரரைப் போற்று’ திரைப்படம் தன்னை அழ வைத்து விட்டதாக ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் வெற்றி பெற்றுள்ள சூரரைப் போற்று திரைப்படம், இந்தியாவில் முதல்முறையாக குறைந்த விலையில் விமான பயணங்களை சாத்தியமாக்கிய ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை.

‘Simply fly: a deccon odyssey’ என்ற கோபிநாத்தின் சுயசரிதை புத்தகத்தின் ஒரு பகுதியைத் தான் சுதா கொங்கரா படமாக்கியுள்ளார். நேற்று முன்தினம் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

நேற்று இரவுதான் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்தேன். சில காட்சிகளில் சிரிக்கவும் செய்தேன். சில குடும்ப காட்சிகள் என்னை அழச்செய்தது. இந்த காட்சிகள் எல்லாம் என் நினைவை மீட்டு பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.

அபர்ணா பாத்திரத்தின் என் மனைவி பார்கவி சித்தரிப்பு அழகாக இருந்தது. வளரத்துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் பாத்திரத்தை சரியாகவும் வலிமையாகவும் செய்து காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா.

இத்தகைய பொருளாதார சூழலில், இந்தப்படம் பலருக்கு உத்வேகமாக அமையும். சூரரைப் போற்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய நூலின் முக்கிய நோக்கத்தை சரியாக பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பெரிய சல்யூட் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கோபிநாத்.