கணவருடன் சேராமலேயே கர்ப்பமாகும் பெண் – ஒரு பக்க கதை விமர்சனம்!

601

ஒரு பக்க கதை…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் மூலம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரசியமாக சொல்லி கவனம் ஈர்த்தவர் பாலாஜி தரணிதரன்.

ஒரு பக்க கதை படத்திலும் அதேபோன்ற களத்தை ஆனால் வித்தியாசமான கதையுடன் கொடுத்து அசத்தி இருக்கிறார். படம் தொடங்கும்போதே ஸ்ரீமத் பாகவத புராண கதையுடன் தொடங்குகிறது. அதிலேயே படத்தின் மையக்கருவை விளக்கிவிடுகிறார்.

நடுத்தர வர்க்க குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும். இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். காதலர்களாகவும் மாறுகிறார்கள். இருவரது காதலையும் அவர்களது குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன. காளிதாஸ் அரியர்களை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறுகிறார்கள்.

இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். காளிதாசுடன் இணையாமலேயே மேகா ஆகாஷ் கர்ப்பமானது எப்படி? இது அறிவியலா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா? இன்னும் பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் தருகிறது படம்.

சற்று பிசகினாலும் ஆபாசமாகி விடும் ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து அதில் சிறிதுகூட ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிக்கும் படமாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் கொடுத்து இருக்கிறார். படம் தொடங்கியது முதல் இறுதிக்காட்சி வரை நம்மை படத்துடன் பின்னி பிணைத்து ரசிக்க வைக்கிறார். முக்கிய காட்சிகளை வசனங்கள் இல்லாமல் காட்சிமொழி மூலம் உணர்த்தும்போது பாலாஜியின் திறமை பளிச்சிடுகிறது.

மேகா ஆகாஷ் கர்ப்பமானதை வீட்டில் சொல்லும் காட்சி அதற்கு உதாரணம்.
காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும் பாலாஜி தரணிதரனின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். எந்த காட்சியிலும் நடிகர்களாக தெரியவே இல்லை. இரு தரப்பு பெற்றோர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். கடவுளாக மாறும் அந்த குழந்தையும் சிறப்பான நடிப்பு.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்துக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு வண்ணம் கூட்டியுள்ளது. பாலாஜி தரணிதரனுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதிய மரியாவும் பாராட்டப்பட வேண்டியவர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் எப்போது பார்த்தாலும் சிரித்து ரசிக்க வைக்கும் படம். அதே போன்ற ஒரு அற்புத படைப்பை ஒரு பக்க கதை மூலம் கொடுத்து மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் பாலாஜி தரணிதரன்.
மொத்தத்தில் ‘ஒரு பக்க கதை’ சுவாரஸ்யம்.