புதுசா Green Cinemas என்ற தியேட்டர் ஓபன் செய்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!

461

கே இ ஞானவேல்ராஜா…

தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா புதிதாக கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கை திறந்துள்ளார். சிறு வயது முதலே படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் கே இ ஞானவேல்ராஜா. ஆதலால், தனது அன்றாட பள்ளி வகுப்புகளை கட் அடித்து வந்துள்ளார்.

அதோடு, தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளில் படம் பார்த்து பொழுதை கழித்து வந்துள்ளார். இவர், நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தாருக்கு தூரத்து உறவினர். அதன் பிறகு ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதன் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வந்த சில்லுனு ஒரு காதல் படத்தை தயாரித்துள்ளார். சூர்யாவின் படம் மட்டுமல்லாமல் கார்த்தியின் படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், இருவரது படங்களை தயாரிப்பதோடு 2012 ஆம் ஆண்டு வரை விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

மேலும், அட்டகத்தி, கும்கி, சூது கவ்வும் ஆகிய படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மட்டுமல்லாமல் ஆட்னா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

சில்லுனு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, பிரியாணி, ஆள் இன் ஆள் அழகுராஜா, மெட்ராஸ், டார்லிங், கொம்பன், இறைவி, டார்லிங் 2, சி3, தானா சேர்ந்த கூட்டம், கஜினிகாந்த், நோட்டா, தேவராட்டம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் உள்பட ஏராளமான படங்களை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தை தயாரித்து வருகிறார். சகுனி, அட்டகத்தி, கும்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஓ காதல் கண்மணி, 24, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் முறையாக திரையரங்கு உரிமையாளராகவும் திகழ்ந்துள்ளார். ஆம், கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கை சென்னையில் உள்ள பாடி பகுதியில் திறந்துள்ளார். 2 ஸ்கிரீன்கள் மட்டுமே இந்த திரையரங்கு கொண்டுள்ளது என்றும், ஸ்கிரீன் ஒன்றில் 384 இருக்கைகளும், ஸ்கிரீன் 2ல் 142 இருக்கைகளும் இருக்கையில் வகையில், திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு திறந்துள்ள ஞானவேல்ராஜாவிற்கு நடிகர் கார்த்தி, ஆர்யா என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்யா கூறியிருப்பதாவது: இது உங்களது ஆரம்பம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறைய திரையரங்குகள் நீங்கள் திறக்க வேண்டும். இந்த பொங்கலுக்கு மாஸ்டர் படமும், ஈஸ்வரன் படமும் பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ்ல ரிலீசாகிறது.

படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை விட சிறந்த அனுபவமும் எங்கும் கிடைக்காது. இந்த கொரோனா காலத்திலேயும், ரசிகர்களாகிய உங்களுக்காக திரையரங்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதறகாக துணிச்சலோடு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்களை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு எனது பாராட்டுகள். தயவு செய்து இந்த இரு படங்களையும் திரையரங்குகளில் பார்த்து உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.