விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகிறது விஷாலின் ‘சக்ரா’ : நீதிமன்றத்தின் உத்தரவால் படக்குழுவினர் மகிழ்ச்சி..!

91

நடிகர் விஷால்…

நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா.

இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள், திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஷாலின் ஆக்ஷன் பட நஷ்டத்திற்காக விஷால் கொடுக்க வேண்டிய ரூ. 8.3 கோடி பணத்திற்கான உத்தரவாதத்தை விஷால் தரப்பினர் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி, ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.