வெளியேற்றப்பட்ட சரவணன்
பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் நேற்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்ஷி ஆகியோரது பெயர் இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். அங்கு வைத்து சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அவர் பேசினார்.
அதோடு, இந்த விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட போதும், தேசிய அளவில் பேசு பொருளாகி விட்ட இந்தப் பிரச்சினையில் அவருக்கு தண்டனை தரும் விதமாக, உடனடியாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். சக போட்டியாளர்களுக்குத் தெரியாமல், அவர் கன்பெக்சன் ரூமில் இருந்த கதவு வழியாகவே வெளியேற்றப்பட்டார்.
சரவணனும் பிக் பாஸின் உத்தரவை மதித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது. சரவணனும் கன்பெக்சன் ரூமில் வைத்து மன்னிப்பு கேட்டார். தற்போது அதன் தொடர்ச்சியாகத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.