‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ்….!!

67

புதுடெல்லி……………

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படக்குழுவிற்கு இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

அந்த போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது. மேலும் சிம்பு ஒரு பாம்பைப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதனைதொடர்ந்து சிம்பு பாம்பைத் துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அந்தக் காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ கசிந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் விசாரித்துவருகின்றோம் என்று இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய விலங்கு நல வாரியம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளைப் பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.