மகேஷ்பாபு – விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம் !

676

இவனுக்கு சரியான ஆள் இல்லை…

மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன் இராணுவத்தில் நாயகன் மகேஷ் பாபு குழுவில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணத்திற்காக இரண்டாவது மகனை அழைக்கிறார் விஜயசாந்தி.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது மகனும் இறந்து விடுகிறார். மகன் இறந்த செய்தி அறிந்தால் திருமணம் நின்று விடும் என்பதால், திருமணம் நடந்து முடிந்த பிறகு விஜயசாந்தியிடம் சொல்லலாம் என்று அந்த ஊருக்கு செல்கிறார் மகேஷ் பாபு.

சென்ற இடத்தில் விஜய சாந்திக்கும் அந்த ஊரில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பிரச்சனை இருப்பதை மகேஷ்பாபு அறிகிறார். இறுதியில் விஜய சாந்திக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான பிரச்சனையை மகேஷ்பாபு தீர்த்து வைத்தாரா? மகன் இறந்த செய்தியை விஜயசாந்திடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனக்கே உரிய பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பேராசிரியராக வரும் விஜயசாந்தி கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

ஆக்ஷன் கலந்து குடும்பபாங்கான படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. பரபரப்பாக தொடங்கும் திரைக்கதை போகப்போக அடங்கிவிடுகிறது. மகேஷ் பாபு ரயிலில் ஊருக்கு வரும் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேத்துகிறார் இயக்குனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ சுவாரசியம் குறைவு.