போலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் – காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்!

696

காவல்துறை உங்கள் நண்பன்..

நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு நாள் ரவினா இரவில் நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை தேடி செல்கிறார்கள்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ், சுரேஷ், ரவினாவை மறித்து விசாரிக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

போலீசை எதிர்த்து பேசுவதால் கோபமடையும் மைம் கோபி, சுரேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் சுரேஷ், இதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, நிறைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார். போலீஸிடம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏற்ற முகம், ஆனால், கோபம் செட்டாக வில்லை. நாயகியாக நடித்திருக்கும் ரவினா யதார்த்தமான நடிப்பு. கணவர் மீது பாசம், கோபம், அக்கறை, பரிதாபம், ஏக்கம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். சுரேஷ், ரவினா இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பல இடங்களில் பரிதாபப் பட வைத்திருக்கிறார் ரவினா.

போலீஸ் அதிகாரியாக வரும் மைம் கோபி, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

போலீசை ஒருவர் எதிர்த்து பேசினால், என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.எம். கதாபாத்திரங்கள் தேர்வு, மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆனால், இப்படம் அதற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் திரைக்கதையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். அனைத்து போலீசும் கெட்டவர்கள் இல்லை, நல்ல மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பிளஸ்.

முதல் பாதியின் நீளம் மைனஸ். ஆதித்யா, சூர்யா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ கவர்கிறான்.