இணையத்தை அசத்தும் ரூபம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

89

ரூபம்…

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் க.பெ ரணசிங்கம். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து டாக்டர், அயலான், டிக்கிலோனா உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

இந்தப் படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரூபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி, சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ரூபம் படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் ஹாரர் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பார்வதி கைவசம் ஆலம்பனா திரைப்படம் உள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் என அசத்தி வரும் பார்வதி பாலிவுட் படமான 83 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.