சரியான நேரத்தில் இணையும் ஹரி – அருண்விஜய்: ஆக்சன் விருந்து நிச்சயம் !

70

ஹரி – அருண்விஜய்..

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

ஹரி மற்றும் அருண்விஜய் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் இருவரும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தற்போதுதான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் இணைகின்றனர். இருவரும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே இணைய முயற்சி செய்தபோதிலும் தற்போதுதான் காலம் கனிந்துள்ளது.

அருண் விஜய் தற்போது ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து வந்துள்ளதும், அவர் தற்போது ஹரியின் படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கருதுவதாலும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர். எனவே இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்த படத்தின் வலிமையான கான்செப்ட் கொண்ட கதைக்கு அருண்விஜய் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஹரி கருதியதால் இந்த படத்தில் அருண்விஜய்யை அவர் பயன்படுத்துகிறார்.

இந்த படத்தின் கதை ஒரு எமோஷனல் ஃபேமிலி சப்ஜெக்ட் என்றும், ஆக்சன் மற்றும் காமெடி இணைந்த இந்த படம் தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றி பெறும் வகையில் இருக்கும் என்றும் இந்த படம் அருண்விஜய்க்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தி தரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பல பிரபல நடிகர்களும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும், ஒருசில காட்சிகள் சென்னையிலும் படமாக்க ஹரி திட்டமிட்டுள்ளார்.

விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் இன்று மாஸ் நடிகர்களாக இருப்பதற்கு ஹரியின் இயக்கத்தில் கிடைத்த வெற்றிப்படங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஹரியின் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.