பாவக்கதைகள் திரைவிமர்சனம்..!

716

பாவக்கதைகள்…

சமீப காலமாக ஆந்தாலஜி படங்கள் மீது, தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. ஆம் சில்லு கருப்பட்டி மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட படங்கள் ஆந்தாலஜி முறையில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்தோம்.

ஜாதிப் பெருமிதம், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சிகளும் ஊர் என்ன சொல்லுமோ என்ற கவலையும் பெற்றோரை எம்மாதிரி கொடூரமான எல்லைகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்த Anthology திரைப்படத்தின் மையம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் ஒன்றிணைந்து, நெட்ஃப்ளிக்சில் தளத்திற்காக இயக்கியுள்ள பாவக்கதைகள், ரசிகர்களை திருப்திபடுத்தியதா? இல்லையா? என்று பார்ப்போம்.

1. { தங்கம் }

இயக்குனர் – சுதா கொங்கரா

நடிகர்கள் – சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பாவாணிஸ்ரீ.

பெண்ணாக மாறி தன் நண்பன் சரவணனை (சாந்தனு பாக்யராஜ்) கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறான் சத்தார் (காளிதாஸ் ஜெயராம்). ஆனால், சரவணன் தன் தங்கையைக் காதலிப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவுகிறான் சத்தார். அவர்களுக்காக தனது உயிரையும் விடுகிறான்.

அவமானம், அச்சம் போன்ற உணர்வுகளின் காரணமாக, பெற்ற பிள்ளையை சாகவிடுகிறார்கள் அவனது பெற்றோர். தமிழநாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களை போல, பல சிக்கல்களை அரை மணி நேரத்திற்குள் அழகாக கூறுகிறது இந்த கதை. சாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது.

2. { லவ் பண்ண உட்றனும் }

இயக்குனர் – விக்னேஷ் சிவன்

நடிகர்கள் – அஞ்சலி, கல்கி கொச்சிலின்

ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு புறம் மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம்.

இந்த நான்கு படங்களில் சற்று நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் இதுதான். அடுத்து என்ன நடக்குமோ என்ற உணர்வும் படம் முழுக்க நீடிக்கிறது. ஆனால், படத்தின் முடிவு ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது. முதல் மகளை ஆணவக் கொலை செய்தவர், இரண்டாவது மகளை அப்படிச் செய்யாமல் விடுவதால், அவள் உதவியுடன் ஃப்ரான்சிற்குப் போய் பிரெஞ்சு கற்றுக்கொள்கிறார். ஒரு ஆணவக் கொலை செய்த தந்தையை மகள் எப்படி சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார் என்றும் தெரியவில்லை.

3. மூன்றாவது படம் { வான்மகள் }

இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – சிம்ரன், ஆதித்யா பாஸ்கர், கௌதம் வாசுதேவ் மேனன்

சத்யா (கௌதம்) – மதி (சிம்ரன்) தம்பதியின் 12 வயது மகள் பொன்னுத்தாயியை யாரோ சில மர்ம நபர்கள், கடத்திக்கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட, அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெறோர்கள். மகளை எப்படித் அந்த துயர சம்பவத்தில் இருந்து மீண்டுவர செய்வது, காவல்துறையிடம் சொன்னால் ஊரில் என்ன நினைப்பார்கள் என குழம்பித் தவிக்கும் பெற்றோர் கடைசியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிப் படம். இந்தப் படத்திலும் காவல்துறையை அணுகினால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற குறித்த தயக்கத்துடனேயே, வேறு ஒரு புள்ளியில் முடிவுக்கு வருகிறது படம்.

4. { ஓர் இரவு }

இயக்குனர் – வெற்றிமாறன்.

நடிகர்கள் – பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி.

காதலித்து, வீட்டை விட்டு வெளியேறும் மகள் (சாய் பல்லவி). அவள் கர்ப்பமடைந்த செய்திகேட்டு மகள் வீட்டிற்கு வரும் தந்தை (பிரகாஷ் ராஜ்), சொந்த ஊரில் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்பி சொந்த ஊருக்குச் செல்லும் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இப்படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன. இத்தகைய அழுத்தத்தை குடும்பத்தின் மீது சுமத்தும் சமூகத்தின் மீதும், நமக்கு பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் இப்படத்தின் பலவீனம்.

மொத்தத்தில் நான்கு படங்களிலும் ஜாதியின் வீச்சை பளீச்சென்று முகத்தில் அறையும்படி சொல்லும் ‘ பாவக்கதைகள்’ இந்த ஆண்டியில் வெளியான திரைப்படங்கள், தமிழ் சினிமாவிற்கு ஓர் முக்கிய அங்கம்.