ஹாலிவுட்டில் அறிமுகமாகும் விஷால் பட நடிகை!

76

நீது சந்திரா..

விஷால் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் ‘நெவர் பேக் டவுன்: ரிவால்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தபு, மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோனே, சப்னா ஆஸ்மி ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த பிரபல நடிகர் இர்பான்கானும் ஹாலிவுட் படத்தில் வந்தார். தற்போது தனுஷ் தி க்ரே என்ற ஹாலிவுட் படத்தில் கிரிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகை நீது சந்திராவும் நெவர் பேக் டவுன் படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படம் அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகிறது. நீது சந்திரா கராத்தே கற்றவர் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். கெல்லி மார்டிசன் இயக்குகிறார். மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன், ஒலிவியா பாபிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

நீது சந்திரா, தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து பிரபலமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.