கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை பயணம் – ஷகிலா விமர்சனம்!

802

ஷகிலா…

கிராமத்தில் தந்தை, தாய் ஐந்து தங்கைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்து வருகிறார் ஷகிலா. இந்நிலையில், ஷகிலாவின் தந்தை திடீரென இறந்து விடுகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக சினிமாவில் ஜூனியர் நடிகையாக சேரும் ஷகிலா விரைவில் முன்னணி நடிகையாக ஆகிறார். ஷகிலா படங்களின் வரவால் முன்னணி நடிகரின் திரைப்படங்கள் பாதிக்கப்படுகிறது.

இதேசமயம் ஊரில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் ஷகிலாவின் படங்கள் தான் என்று முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி, வதந்தியை கிளப்பி விடுகிறார். இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்க, ஷகிலாவின் திரைப்படங்களுக்கு தடை ஏற்படுகிறது. படம் தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் மறுக்கிறார்கள்.

பணம் மற்றும் சினிமா வாழ்க்கையை இழக்கும் ஷகிலா, இறுதியில் மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கினாரா? எப்படி வாழ்க்கையை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஷகிலா எழுதிய புக்கை மையமாக வைத்து, திரைப்படத்திற்காக சில மாறுதல்களை செய்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ்.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை இறுதியில் மெதுவாக செல்கிறது. பிற்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். பங்கஜ் திரிபாதிக்கான காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிந்திக்க வைக்கிறார்.

ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சா சத்தாவின் நடிப்பு அதிகம் எடுபடவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பையும், ஒரு சில காட்சிகளில் மட்டும் அழகையும் ரசிக்க முடிகிறது. முன்னணி நடிகராக சலீம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். வீர சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸ் ஆகியோரின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சந்தோஷ் ராய் பதாஜேயின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘ஷகிலா’ சுவாரஸ்யம் குறைவு.