நயன்தாரா…
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீர மங்கை ஒருவரின் கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய திரையுலகில் சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வேலுநாச்சியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இது குறித்த பயிற்சிகளிலும் நயன்தாரா விரைவில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.