யாருப்பா ஹாலிவுட் நடிகரா? இல்ல இல்ல நம்ம ஊரு வையாபுரி: வைரலாகும் புகைப்படங்கள்!

81

வையாபுரி…….

காமெடி நடிகர் வையாபுரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல் ஹாசன், விஜய், ரஜினிகாந்த், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் வையாபுரி. தற்போது இன்றைய கால ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உடன் பிறப்பு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லவ் டுடே, அவ்வை சண்முகி, அமர்க்களம், தில், திருப்பாசி, சிம்மாசனம், ஊட்டி, நீ வருவாய் என,

கள்ளழகர், தசவதாரம், தீ, காவலன், ஒஸ்தி என்று ஏராளமான படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு ஏன், கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டு அனைவரிடம் வரவேற்பு பெற்றார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டில் புதிய முயற்சியை மேற்கொள்ளும் வகையில், முதல் முறையாக போட்டோஷூட் எடுத்துள்ளார்.

மிகவும் வித்தியாசமாக ஹாலிவுட் ஹீரோக்கள் அளவிற்கு இருக்கும் அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாருப்பா இவரு, நம்ம வையாபுரியா என்று கேட்கும் அளவிற்கு அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஹாலிவுட் ஹீரோ, நம்ம கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் என்றெல்லாம் மீம்ஸ் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த போட்டோஷூட் குறித்து வையாபுரி கூறியிருப்பதாவது: புத்தாண்டில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக எடுத்த போட்டோஷூட் தான் இது.

இதுவரை நான் போட்டோஷூட் எடுத்ததே இல்லை. இந்த புகைப்படங்களை எனது திரையுலக நண்பர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நான் அனுப்பி வைத்தேன்.
இயக்குநர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, படங்களிலும் வேறு மாதிரியாக காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். காமெடி மட்டுமல்லாமல், அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஆசையோடு காத்துக்கொண்டிருக்கும் எனக்கு, இந்த போட்டோஷூட் வெளியுலகிற்கு என்னை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் இரண்டு படங்கள், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஒரு படம், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அவர் எடுத்துக்கொண்டு இந்த போட்டோஷூட் முயற்சி அவரை வேறொரு கோணத்தில் திரையில் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.