அச்சச்சோ…அங்கேயா! வேணாம் வேணாம்…இந்தியாவிலேயே இருக்கட்டும்: வலிமை ஆக்‌ஷன் காட்சி!

381

வலிமை…

வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தையும் ஹெச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, புகழ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பை அஜித் நிறுத்தியிருந்தார்.

தற்போது மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக படக்குழுவினர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், உருமாறி வரும் கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பை டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பை முடித்து, அஜித்தின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தனது வலிமை படக்குழுவினருடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர், நடிகைகளின் படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்த வண்ணம் இருக்கும் நிலையில்,

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.