சிங்கக்குட்டியை தத்தெடுத்த கே.ஜி.எப். பட வில்லன் நடிகர்.. தந்தையின் பெயர் சூட்டி மகிழ்ச்சி!!

79

வசிஷ்ட சிம்ஹா…….

பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவில் உள்ள 8 மாத சிங்கக்குட்டியை பிரபல கன்னட நடிகரும், கே.ஜி.எப் திரைப்பட வில்லனுமான வசிஷ்ட சிம்ஹா தத்தெடுத்துள்ளார்.

ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது பன்னார்கட்டா வன உயிரியல் பூங்கா. இங்கு பட்டாம்பூச்சி முதல் சிங்கங்கள் வரை பல்வேறு வகையான உயினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இங்கு இருக்கும் சிங்கம், புலி போன்ற வன உயிரிகளை தத்தெடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் வசதிப் படைத்தவர்கள் சிங்கம், புலி போன்ற உயிரினங்களை அவ்வபோது தத்தெடுப்பது வழக்கம்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி பிரபல கன்னட நடிகரும், கே.ஜி.எப். திரைப்படத்தில் வில்லனாக நடித்தவருமான வசிஷ்ட சிம்ஹா, பூங்காவிலுள்ள 8 மாத ஆண் சிங்கக்குட்டியை தத்தெடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பன்னார் கட்டா வனஉயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு சிங்கக்குட்டியை தத்தெடுத்ததற்காக ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் சிம்ஹா தான் தத்தெடுத்த சிங்ககுட்டியையும் அதனோடு இருந்த சிங்கங்களையும் ஆசையோடு பார்த்து மகிழ்ந்தார். அப்போது அவர் தான் தத்தெடுத்துள்ள சிங்கக்குட்டிக்கு தனது தந்தையின் பெயரான விஜய நரசிம்ஹா பெயரையே சூட்டியுள்ளார்.

இதுகுறித்து வசிஷ்ட சிம்ஹா, சிங்கக்குட்டியை தத்தெடுத்துள்ளது மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும், ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும்போதும் தான் ஒரு வன உயிரினத்தை தத்தெடுக்கப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பன்னார்கட்டா வன உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் பேசும்போது, ”கொரோனாவால் தற்போது பூங்கா நிர்வாகம் பல நஷ்டங்களை சந்தித்து வருகிறது. வன உயிரினங்களை தத்தெடுப்பது மூலம் குறைந்தளவு உதவியாக இருக்கும், வசிஷ்ட சிம்ஹா சிங்கக்குட்டியை தத்தெடுத்ததுபோல இன்னும் பலர் வன உயிரினங்களை தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்றனர்.