தைப்பூசத்துக்கு வரும் சிபிராஜின் கபடதாரி!

91

கபடதாரி…

சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கபடதாரி படம் வரும் 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் கபடதாரி. இந்தப் படத்தில் சிபிராஜ் உடன் இணைந்து நந்திதா, பூஜா குமார், நாசர், ஜெய பிரகாஷ், ஜே சதீஷ்குமார், மயில்சாமி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கிரியேட்டர்ஸ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கபடதாரி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு கபடதாரி படத்தை திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வரும் 28 ஆம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கபடதாரி படம் தவிர, சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரேஞ்சர் படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன், காளி வெங்கட் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

ரேஞ்சர் படத்தில் வனத்துறை அதிகாரியாக சிபிராஜ் நடித்துள்ளார். இந்தப் படமும் இந்த ஆண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.