பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம் பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம்!

961

மாறா…

நாயகி ஷ்ரத்தாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது புடிக்காமல், தனக்கு வேலை இருப்பாதாக கூறிவிட்டு கேரளாவிற்கு செல்கிறார். செல்லும் இடத்தில், தங்க இடம் தேடி அலைகிறார். அப்போது சிறுவயதில் ஒருவர் தனக்கு சொன்ன கதை, அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளதை பார்த்து வியப்படைகிறார்.

இறுதியாக நாயகன் மாதவன் உபயோகித்து வந்த வீட்டில் தங்குகிறார் ஷ்ரத்தா. அந்த வீட்டில் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் உண்மை கதை ஒன்று சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.

அதை ஷ்ரத்தா ஆவலுடன் படித்து வருகிறார். ஆனால் அந்த உண்மைக்கதை சித்திரம் ஓரிடத்தில் சஸ்பென்சாக நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் மாதவனை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஷ்ரத்தா.

மாதவன் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் ஷ்ரத்தா, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து மாதவனின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இறுதியில் ஷ்ரத்தா மாதவனை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் கதைக்கருவை கொண்டு மாறா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாறாவாக நாயகன் மாதவன், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் மாறா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி ஷ்ரத்தா அழகு, பதுமையுடன் நடிப்பில் மிளிர்கிறார். மாறாவின் சித்திரங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அருமை. மற்றொரு கதாநாயகியான ஷிவதாவின் நடிப்பும் அற்புதம்.

அலெக்ஸாண்டரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், அப்புக்குட்டி, மவுலி, அபிராமி என படத்தில் ஏராளமான அனுபவ நடிகர்கள் நடித்திருக்கிறார். அவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் திலீப் குமார், சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் ரசிக்கும்படி உள்ளது. சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பி பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தேர்வு திறம்பட செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். கலை இயக்குனர் அஜயனின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதீபலிக்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாறா’ மனதில் நிற்கிறார்.