இது மாஸ்டர் பொங்கல் டா: FDFS பார்த்து வியந்த கீர்த்தி சுரேஷ்!

67

கீர்த்தி சுரேஷ்..

விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளதை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் மாஸ் காட்டிய படம் என்றால் அது மாஸ்டர் தான்.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையிலும், மாஸ்டர் படம் வெற்றிகரமாக இன்று வெளியாகியுள்ளது என்றாலே பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தான்.

எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஏங்கித்தவித்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் இன்று திருவிழா தான். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தணு, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் உதயா தனது குடும்பத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை பார்த்து மகிழ்ந்ததை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் தன் பக்கங்கிற்கு டுவிட்டரில் மாஸ்டர் படம் முதல் நாள் முதல் ஷோ பார்த்ததாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து ஒரு தியேட்டருக்கு திரும்பி வருவது என்பது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்கக் கூட முடியாது. இன்னும் இதை விட சிறந்தது என்ன? இது தான் என்று பதிவிட்டதோடு இது மாஸ்டர் பொங்கல் டா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனம் பெற்றது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் ரூ.115 கோடி வரையில் வசூலிலும் கல்லா கட்டியுள்ளது.