விஷ்ணு விஷாலின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கம்!

106

விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இன்று நேற்று நாளை’. தமிழில் முதல் முதலாக வெளிவந்த டைம் டிராவல் குறித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த படம் நல்ல வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில்,

சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது. நேற்று நடைபெற்ற பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் சிவி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் பொன்ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கிட்டத்தட்ட அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் ஏற்கனவே ’காடன்’, ’ஜெகஜ்ஜால கில்லாடி’ ’எப்.ஐ.ஆர்’ ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.