சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய புலிக்குத்தி பாண்டி!

82

புலிக்குத்தி பாண்டி…

விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவருக்கு கும்கி மட்டுமே நல்லவொரு அடையாளத்தை கொடுத்துள்ளது.

இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வாகா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும், சமுத்திரக்கனி, சிங்கம்புலி, ஆர் கே சுரேஷ், ஆடுகளம் நரேன், KPY பாலா, KPY தீனா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்களின் வரிசையில் முத்தையா புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கியிருந்தார். ஆனால், எந்தப் படத்திலும் இல்லாத வகையில் புலிக்குத்தி பாண்டி படத்திற்கு கிளைமேக்ஸ் அமைந்திருந்தார்.

ஆம், ஆரம்பம் முதலே அடிதடி என்று அமர்க்களப்படுத்தி வந்த நம்ம ஹீரோ விக்ரம் பிரபுவை திருமணத்திற்குப் பிறகு அப்படியே எந்த சண்டைக்கும் போகாத ஒரு வித்தியாசமான ஹீரோவாக காட்டி இறுதியில் அதுவே அவருக்கு எமனாக அமைவது போன்று காட்சியமைந்திருந்தார். அதாவது, ஹீரோவை வில்லன் கொலை செய்கிறார். இதையடுத்து, ஹீரோவின் மனைவியான லட்சுமி மேனன் வில்லனை பழிவாங்குகிறார்.

இது தான் படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளில் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. எனினும், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று வெளியான புலிக்குத்தி பாண்டி படம் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

இதே போன்றுதான், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூரரைப் போற்று படம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், புலிக்குத்தி பாண்டி படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட சூரரைப் போற்று படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் பிரபு கூறியிருப்பதாவது: தொலைக்காட்சியில் தமிழ் மூவி புலிக்குத்தி பாண்டி படத்தை 1,32,84,000 இத்தனை பேர் பார்த்துள்ளனர். மேலும், TRP 17.05 என்று குறிப்பிட்டுள்ளார்.