வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்..!

65

ராக்கெட்ரி…

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதன் தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா, மாதவனை வியந்து பாராட்டியதோடு, இப்பாடத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிரெய்லரில் வரும் ஒவ்வொரு வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக ‘ஒரு நாயை அழிக்க… அதற்கு வெறிநாய்னு பட்டம் கட்டினாலே போதும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா…

அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்’ என சூர்யா பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன. இப்படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.