நடிகர் ரித்திஷ் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். இதை தொடர்ந்து, அவருடைய சொத்துக்கள் சென்னையிலும், வேறு சில இடங்களிலும் இருப்பதையெல்லாம் அவரது மனைவி ஜோதி தேடி கண்டுபிடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜோதி மீது சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் ரித்திஷின் உதவியாளரான கேசவன் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடிகர் ரித்திஷிடம் இருந்து வந்தேன். அவருக்கு உதவியாளராக இருந்ததால், அவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் என்னை தங்க வைத்திருந்தார்.
அந்த வீட்டுக்கு வாடகையாக எதுவும் கொடுக்கவில்லை. அதேப்போல, அவருக்கு உதவியாளராக பணியாற்றிய கால கட்டங்களில் எனக்கு அவர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில், ரித்திஷ் இறந்து போனதும், வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி, ரித்திஷின் மனைவி ஜோதி, என்னை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யச் சொன்னார். அப்படியென்றால், ரித்திஷிடம் நான் பணிபுரிந்ததற்கான பணம் நான்கு லட்ச ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டேன்.
அதற்கு மறுத்து விட்டார். அதனால், நான் வீட்டை காலி செய்யவில்லை. உடனே, அடியாட்களை விட்டு என்னை மிரட்டியவர், ஆபாசமாகவும் என்னிடம் பேசினார். தொடர்ந்து, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்.
அதேபோல, இந்த விஷயத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஐசரி கணேஷ், மரியாதையாக வீட்டை காலி செய்து, ஜோதியிடம் ஒப்படைத்துவிடு; இல்லையென்றால், உனக்கு பெரிய சிக்கல் வரும் என மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கேசவன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை அடுத்து, பாண்டி பஜார் போலீசார், நடிகர் ரித்திஷின் மனைவி ஜோதியிடம் விசாரித்து வருகின்றனர்.