“ஒரே படத்துல அவர் சம்பாத்தியமும் காலி, நானும் பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன்!” – உதவி இயக்குநர் கணேஷ்

1520

பரபரப்பான சென்னை – பூந்தமல்லி நெடுஞ்சாலை. `சடசட’வென மழை தொடங்க, ரயில்வே குடியிருப்புக்கு நுழையும் முகப்பிலுள்ள நடைமேடையில் ஒதுங்கினோம். அதில் உட்கார்ந்தபடி, எதையோ எழுதிக் கொண்டிருந்தார் ஒருவர். ‘மழை தூறுகிற போது உப்பு விக்கறதும் ஒண்ணுதான், கதை எழுதறதும் ஒண்ணுதான்.

உப்பும் கரைஞ்சிடும். மையும் அழிஞ்சிடுமில்லையா’ எனச் சிரித்தவர், ’’என்ன பார்க்கறீங்க கதை எழுதிட்டிருக்கேன். இதுவரை முப்பது கதை எழுதிட்டேன்’’ என்றார். ‘உருவமும் பேச்சும் வித்தியாசமாய் இருக்கிறதே’ என்ற நம் மைண்ட் வாய்ஸை உணர்ந்தவராய், ‘’மழை பெரிசா விழலாம் போலத் தெரியுது.

ஒதுங்க எனக்கொரு ஓசியிடம் இருக்கு. நீங்களும் நின்னு போங்க’’ எனக் குடியிருப்பின் உள்ளே இருந்த அந்த ‘ஷெட்’டுக்குள் நம்மை அழைத்துச் சென்றவர், அவரது சொந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்த கணேஷ்.

“பூர்வீகம் மானாமதுரை. அப்பா வேலை தேடி சென்னை வந்துட்டதால நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே தண்டையார்பேட்டை. பத்தாவது பப்ளிக் எக்ஸாம் எழுதறதுக்கு முந்தைய நாள் கராத்தே டோர்னமென்ட். அதனால ரெண்டு பேப்பர் போயிடுச்சு. கராத்தே மட்டுமில்லீங்க கிரிக்கெட்டும் கூட எனக்கு ரொம்ப இஷ்டம்’’ எனக் கையில் ‘கிரிக்கெட்டர்’ எனப் பச்சை குத்தியிருப்பதைக் காட்டியபடியே தொடர்ந்து பேசுகிறார்.

“சினிமா கனவுகளோட திரியற எத்தனையோ பேரைச் சுமந்திட்டிருக்கிற ஊர்னு சென்னையைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே? அது எனக்கும் பொருந்தும். என்ன ஒண்ணு, நான் சென்னைக்கு வெளியில இருந்து வரலை, அவ்ளோதான் வித்தியாசம். படிச்சிட்டிருந்த காலத்துல விளையாட்டு ஆர்வத்தைப் போலவே எழுத்து, சினிமா பக்கமும் என் கவனம் போச்சு.

ஆனாலும் ‘படிப்புன்னு ஒண்ணு இருக்கட்டும்’னு பிளஸ் டூ வுக்குப் பிறகு தபால் மூலம் பி.ஏ. இங்கிலீஷ் சேர்ந்தேன். அப்படியே சில சினிமாக்காரங்களோட தொடர்பும் கிடைச்சது. நடிகர் பாண்டியராஜன் ஹீரோவா நடிச்ச ‘சும்மா இருங்க மச்சான்’ படத்துல உதவி இயக்குநரா பணிபுரிஞ்சேன்.

அந்தப் படத்தை பாண்டியராஜன்கிட்ட உதவி இயக்குநரா இருந்த எஸ்.என். பிரசாந்த் இயக்கினார். ராம்கி நடிச்ச ‘பாஸ் மார்க்’ படத்துலயும் ஒர்க் பண்ணியிருக்கேன். ஒர்க் பண்ணின படங்கள்ல பத்துப் படங்களுக்கு மேல சின்னச் சின்ன கேரக்டர்ல நடிக்கவும் செஞ்சிருக்கேன்.

ஆனா முதன் முதலா டைட்டில் கார்டுல பேர் போட்டு என்னைப் பெருமைப் படுத்தினது பி.வாசு சார்கிட்ட அசோசியேட்டா இருந்த அருள் கிருஷ்ணா. இவர் தன்னோட பேரை சிபி சக்கரவர்த்தினு மாத்திக்கிட்டு, 92ம் வருஷம் இயக்கிய `முதல் பாடல்’ங்கிற படத்துல ‘உதவி இயக்குநர் – காந்தி கணேஷ்’னு டைட்டில் கார்டுல போட்டார். (அப்பா பெயர் காந்தியாம்) படத்தைத் தயாரிச்சது இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரோட சொந்தக்காரப் புள்ள ஒருத்தரை ஹீரோவாப் போட்டு படத்தை எடுத்தார்.

சினிமாவுல சம்பளம்னு முதன் முதலா ஆயிரம் ரூபாய் வாங்கினது அவர் கையாலதான். பிளாட்பாரத்துக்கு வந்தபிறகு கூட சென்டிமென்டா இருக்கட்டும்னு அந்தப் பணத்தைச் செலவழிக்காம அப்படியே வச்சிருந்தேன். ஒரு கட்டத்துல ராத்திரி நேரத்துல வழிப்பறிக் கும்பலும் சமயத்துல போலீஸ்காரங்களும் ‘பையில வச்சிருக்கறதை எடு’ன்னு மிரட்ட, அந்தக் காசை எடுத்துச் செலவு பண்ணிட்டேன்.

’முதல் பாடல்’ படத்தால் எஸ்.ஏ.ராஜ்குமார் சம்பாதிச்ச பணத்தை இழந்துட்டார்னு பின்னாடி கேள்விப்பட்டேன். ‘டைட்டில் கார்டுல எல்லாம் பேர் போட்டுட்டாங்க, இனி நமக்கும் சினிமாவுல ஒரு இடம் இருக்கு’னு நான் நினைச்சதும் அர்த்தமில்லாமப் போச்சு’’ என்றவர், தொடர்ந்தார்.

“வீட்டுல யார் பேச்சையும் கேக்காம, ‘சினிமாவுல சாதிக்கப்போறேன்’னு நான் அலைஞ்சிட்டிருந்த நேரத்துல என் தம்பி, தங்கச்சிங்க எல்லாரும் படிச்சு நல்ல வேலைகளுக்குப் போயிருந்தாங்க. சினிமா தவிர வேற வேலையும் தெரியாம, வயசும் கூடியிருந்ததால, கல்யாணம் காட்சிங்கிற சம்பவத்துக்கெல்லாம் வாழ்க்கையில இடமே இல்லாமப் போயிடுச்சு.

வீட்டுல யார் முகத்துலயும் முழிக்கச் சங்கடமாகிப் போக, பழையபடி கொஞ்ச நாள் கோடம்பாக்க ஏரியாவுலயே திரிஞ்சிட்டிருந்தேன். ஆனா நல்லதா எதுவும் நடக்கலை. என்னுடைய ஒரு தம்பி பைலட்டா இருக்கான். இன்னொரு தம்பியும் பெரிய அதிகாரியா இருக்கான். அப்பா அம்மா இல்லை. தம்பிங்களை ஒரு தடவை சந்திச்சேன்.

அவங்க என் மீது பாசமாத்தான் இருக்காங்க. ஆனா மூத்த மகனா நான் பொறுப்பா இருக்க வேண்டிய காலத்துல இல்லாம, இப்ப அவங்க முன்னாடி போய் நிற்க எனக்குக் கூச்சமா இருந்ததால, அவங்க தொடர்பையும் விட்டுட்டேன். வடசென்னையில நான் பொறந்து வளர்ந்த வீடு இப்ப எனக்கு அடையாளமே தெரியாதுன்னா பாருங்க’’ என்றவர் சில நிமிடங்கள் மௌனமாக எதையோ வெறித்துப் பார்த்து விட்டு மறுபடியும் தொடர்கிறார்.

‘’சினிமா இப்படித்தான் சார். நாற்பது வருஷத்துக்கும் மேல ஃபீல்டுல நிற்க ரஜினியால முடியுதுன்னா அவர் வாங்கி வந்த வரம்னுதான் நான் சொல்வேன். ‘தளபதி’ பட ஷூட்டிங்கும் நான் ஒர்க் பண்ணின படத்தோட ஷூட்டிங்கும் பக்கத்துல பக்கத்துல நடந்திச்சு.

‘ராக்கம்மா கையைத்தட்டு’ பாட்டுல ஆடியிருப்பாங்களே சோனு வாலியா அவங்க தங்கச்சி மோனு வாலியாதான் எங்க படத்துல ஹீரோயின். ரஜினி ஷூட்டிங்ல இருக்கார்னு தெரிஞ்சதும் எங்க ஷூட்டிங்ல இருந்த அத்தனை பேரும் அங்க ஓடினோம். எதுக்கு இதைச் சொல்றேன்னா, சினிமா யாரை எப்ப எப்படி வச்சிருக்கும்னு கணிக்கவே முடியாது.