மனநலம் பாதிக்கப்பட்டோரை இழிவுபடுத்துகிறதா நேர்கொண்ட பார்வை?

1090

நேர்கொண்ட பார்வை

பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் “அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பா திப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆ பத்தை விளைவிப்பார் என்பதாகும்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ‘பைபோலார் டிஸார்டர்’ எனப்படும் இருமுனைப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் செயல்பட்டுவரும் ‘மைண்ட் மேட்டர்ஸ் சர்க்கிள்’ என்ற அமைப்பு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சரவணராஜா, ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து தனது எதிர்ப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கருத்தைப் பல்வேறு மனநல மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சரவணராஜாவிடம் பேசினோம்.
“சமூகம் நாளுக்குநாள் பக்குவப்பட்டுக்கொண்டு தனது கருத்தியல்களை மாற்றிக்கொண்டு வருகிறது. பெரும்பான்மை சமூகத்தால் பாதிப்புக்குள்ளாகும் பல்வேறு வகைச் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கும் மனநிலைக்கு மாறிக்கொண்டு வருகிறோம். பல்வேறு காரணங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களை ‘மனநலச் சேவைப் பயனர்கள்’ என்று அழைக்கவேண்டுமென்று ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் மனநலச் சேவைப் பயனர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற கருத்தைப் பதிவுசெய்யும் திரைப்படங்கள் நம் தமிழ்த்திரையுலகில் தொடர்ந்து வெளிவருகின்றன.`உறியடி’ திரைப்படத்தில் கூலிக்கு கொலை செய்பவன் மனநோயாளியாக நடிப்பதாகக் காட்டுவது, `ராட்சசன்’ திரைப்படத்தில் கடுமையான உடல்நலச் சிக்கல்களை உண்டாக்கக் கூடிய வயதாகும் குறைபாடு (aging syndrome) உள்ள நபரை பகாசுர சக்தி கொண்ட வில்லனாகக் காட்டுவது என மனநிலை பா திக்கப்பட்டவர்களை கொ டூரமானவர்களாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள `நேர்கொண்ட பார்வை’ திரைப்படமும் அதே கருத்தை உறுதிசெய்யும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

“‘பிங்க்’ படத்தில், அமிதாப் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் (தீபக் சேகல்) மனநல பாதிப்பு குறித்து ஒரு மேலோட்டமான சுட்டுதல் மட்டுமே இருந்தது. ஆனால், தமிழில் அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரம் (பரத் சுப்பிரமணியம்) இருமுனைப் பிறழ்வுடையவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மனைவியின் ம ரணத்தையொட்டி பரத்துக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மனநல மருத்துவத்தின் அடிப்படையில் மிகவும் த வறான கருத்து. ஒரு துன்பியல் இழப்பினால், ஒருவருக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்பட வாய்ப்பில்லை.

பாட்டிலிலிருந்து மாத்திரைகளைக் கொட்டி உண்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஆபத்தானவை. அவை பொதுமக்களுக்குத் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும். எந்தவொரு உடல்நலக்கோளாறுக்கும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குமேல் மருந்துகளை உட்கொண்டால் அது கடும்விளைவுகளை உண்டாக்கும்.

பரத்தின் மனநல மருத்துவராக வரும் கதாபாத்திரம் மிக மோசமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. “பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உனக்கும் நல்லது. உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பாதிப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆபத்தை விளைவிப்பார் என்பதாகும்.

உண்மை என்னவெனில், மாத்திரைகள் எடுக்காவிடில் ஒருவர் தனக்குத்தானே ஊறு விளைவிக்கத்தான் சாத்தியம் அதிகம், பிறருக்கு அல்ல. மேலும், அடியாள்களிடம் பேசும் காட்சியில், “தம்பி, நீ ஓடிரு… நீ தாங்க மாட்ட… இது பல வருஷக் கோபம்” என்கிறார் மருத்துவர். இவையெல்லாம் மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் மீது சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மிகைப்படுத்தல்களே.

நடிகர் அஜித்துக்கு ஹீரோயிசமான சண்டைக்காட்சிகளை அமைப்பதற்காகவே மூலத்திரைப்படத்திலிருந்து விலகி, இருமுனைப் பிறழ்வு குறித்து தவறான, மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளைப் பதிய வைத்துள்ளனர். வணிகப் படங்களின் வியாபார நிர்பந்தங்களுக்கு இருமுனைப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பலிகடாவாக்கப்படுவதை நிச்சயம் ஏற்க முடியாது.

எனவே, திரைப்படக்குழுவினர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மனநலப் பாதிப்பு குறித்த அனைத்துக் காட்சிகளையும் நீக்க வேண்டும். குறிப்பாக சமூகப் பொறுப்புணர்விற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற நடிகர் அஜித், இத்தகைய தவறான காட்சிப்படுத்தல்களால் ஏற்படும் நீண்ட கால எதிர்மறை விளைவுகளைப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.