பேமென்ட் தர்றோம்னு சொல்லிட்டு புகார் கொடுத்திருக்காங்க : மதுமிதா!!

786

மதுமிதா

தனியார் நிறுவனம், தன்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர், நடிகை மதுமிதா. இவர், தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சில தினங்களுக்கு முன், நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாகத் திடீரென அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிறுவனத்தின் சார்பில் மதுமிதா மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுமிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். “தனியார் நிறுவனம் என்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்துள்ளது. இந்தப் புகாரை கொடுப்பதற்கு முன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு வரவேண்டிய செட்டில்மென்டுகளைக் கொடுத்துவிடுகிறோம். இன்வாய்ஸ் அனுப்புங்கள் என என்னிடம் கூறினர். என் கணவர் மூலமாக அவர்கள் கேட்டதைக் கொடுத்துவிட்டோம். உங்களுக்கான தொகை விரைவில் வந்துவிடும் எனக் கூறி அனுப்பினர். அதன் பின்னர், ஏன் இப்படி ஒரு புகாரை அளிக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

என்மீது புகார் கொடுத்ததே எனக்குத் தெரியாது. நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டபோதுகூட அப்படி இருக்காது. வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தியாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். அதன்பின்னர் வந்த தொடர் அழைப்புகளையடுத்து, எனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, காவல்நிலையத்தில் விசாரிக்கச் சொன்னேன். இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

கடந்த 10 வருடங்களாக நான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். யார்மீதும் நான் இதுவரை புகார் கொடுத்ததில்லை. என் மீதும் ஒரு சிறிய புகார் கூட வந்ததில்லை. என் மீதான புகாரையடுத்து நான் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். என்னால் அவர்களை அணுகமுடியவில்லை. எனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைத் தர தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்த பின்னர், ஏன் புகார் கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை” என்றார்.

தனியார் நிறுவனத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என முடித்துக்கொண்டார்.