பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : நித்யா மேனன்!!

நித்யா மேனன்…!

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.

மோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் : பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்!!

தளபதி 64 படக்குழுவினர்..

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக இணையும் படம் தான் தளபதி 64. இப்படத்தின் முதல் மற்றும் இராண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பி கர்நாடகாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சில காட்சிகள் மட்டும் தற்போது சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி ஒன்றில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த முடிந்துள்ளது.மேலும், அதில் படகுழுவினரால் சில சங்கடங்கள் தங்களுக்கு நடந்துள்ளது என்று அந்த பள்ளியின் ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “தளபதி 64 பட குழுவினர் தங்களது பள்ளியில் சிகரெட் பிடித்து விட்டு அங்கேயே போடுவது மற்றும் குப்பைகளை பொது இடத்தில போடுவது போன்ற தவறான செயல்களை செய்துள்ளனர். மேலும், பார்வையற்ற மாணவர்களையும் அவர்கள் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் கூடுவதால் பள்ளிக்கு வந்த மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவர் இடமும் மாணவர்களிடம் வந்து 2 நிமிஷம் உரையாற்றும்படி கேட்டுள்ளனர். இதற்கு லோகேஷ் அவர்கள் வந்து பேசிவிட்டு சென்று விட்டாராம். ஆனால், விஜய் இப்போது வருகிறார் அப்போது வருகிறார் என மாணவர்களை காக்க வைத்திருந்தனராம்.

மாணவர்கள் விஜய்யை காண ஒரு இடத்தில் குழுவாக வரவைக்கப்பட்டனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகும் விஜய் வந்து சந்திக்காமல் ஷூட்டிங் முடிந்து ரகசியமாக சென்றுவிட்டார்” என அந்த ஆசிரியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி…….!

ரஜினி…….!

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று கூறினார்.மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது .தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசிய காட்சி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் நடிகர் ரஜினி பேசும் போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது, கஜினி படம் பார்த்து இவர் படத்தில் நடிகனும் ஆசை பட்டேன், ஆனால், காலம் அப்போது அமையவில்லை. தற்பொழுது தர்பார் படம் மூலம் அமைந்திருக்கு.

என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், ரசிகர்கள் ஆடம்பரமாக என் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

இயக்குநர் பாலசந்தர் தான் எனக்கு ரஜினி காந்த் பெயர் வைத்தார், ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என்று என் மேல் நம்பிக்கை வைத்தவர்கள். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

ஒரு வெற்றி வேண்டும் என்றால் நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால் தான் அந்த வெற்றிக் கிடைக்கும். அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம், அன்பு செலுத்துவோம் என்றார்.

சந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் : அப்பாவுடன் கைகோர்ப்பு!!

சந்தானத்தின் மகன்….!

நடிகர் சந்தானம் தான் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தின் மூலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். அவர் நடித்த படங்கள் பல சரியான வரவேற்புப் பெறவில்லை என்றாலும் அவர் முடிவை மாற்றிகொள்வதாக இல்லை. அவர் கடைசியாக நடித்த ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் இப்போது டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டகால்டி படத்துக்குப் பின் அவர் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் மகனும் அவரோடு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்போதே விஜய்யின் நடிப்பை பார்த்து பரிசு கொடுத்த சிவாஜி கணேசன்!!

தளபதி விஜய்……

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில், தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.ஆனால், இவர் முதன் முதலில் வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இப்படத்தில் இவர் நடிப்பை பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்போதே விஜய்யை பாராட்டி, 500 ரூபாய் பரிசும் கொடுத்துள்ளார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது.

கதை கூறியும் கண்டுகொள்ளாத சூர்யா : பிரபல இயக்குனர் வருத்தம்!!

சூர்யா…!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குயின், மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களிலும், இன்னொரு படத்தின் ஆரம்ப கட்ட பணியிலும் அவர் உள்ளார்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்திருந்த நிலையில் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் அலைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் சூர்யா, கௌதம் மேனனை கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது

பொதுவாக கவுதம் மேனன் தனது படத்தின் கதையை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூறமாட்டார். வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கியபோது கமல்ஹாசனுக்கும், என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோது அஜித்துக்கும் முழு கதையை அவர் கூறவில்லை என்பதும் குறிப்பாக படப்பிடிப்பு தொடங்கி பாதி நிறைவு பெற்ற பின்னரும் அவர் கிளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சூர்யாவின் கால்ஷீட் பெறுவதற்காக அவரிடம் முழு கதையை கூறியது மட்டுமின்றி ஊடகங்களிலும் அவர் சூர்யாவுக்காக தயார் செய்து வைத்திருந்த ஒன்லைன் கதையை கூறியுள்ளார். சூர்யா தனது கதையில் இசை கலைஞராக நடிக்க இருப்பதாகவும் இந்த கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது

கௌதம்மேனன் இவ்வளவு தூரம் இறங்கி வந்தும் சூர்யா அவரை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் கௌதம் மேனனுக்கு அவர் படம் நடித்து கொடுப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்?

விஜய்யின் 65-வது படத்தை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை!!

விஜய் சேதுபதி…

சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘சங்கத்தமிழன்’ என்ற வெளியாகியிருந்தது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார்.

விவேக் – மெர்வின் இணை இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர்.இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவேக், இயக்குநர் மோகன் ராஜா ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கனிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் சேர்ந்து நடிக்கும் ரஜினி, கமல்? அடேங்கப்பா, இது லிஸ்ட்டுலயே இல்லையே!!

ரஜினியும், கமலும்….*

40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்களாம்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்து அதை விஜய்யின் பிகிலோடு சேர்த்து ரிலீஸ் செய்து வெற்றிக் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனாலேயே அனைவரின் கவனமும் லோகேஷ் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அவர் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் அண்மையில் ரஜினியை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். அப்பொழுது ரஜினி லோகேஷை பாராட்டியிருக்கிறார். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ரஜினி தெரிவித்தாராம்.

தளபதி 64 படத்தை முடித்த பிறகு லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து தான் படம் எடுக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ரஜினியின் நண்பர் கமல் ஹாஸனும் நடிக்கிறாராம். 40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கப் போவது குறித்து தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பு சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும், கமலும் சேர்ந்து அரசியல் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம். ரஜினியையும், கமலையும் தனித்தனியாக இயக்கவே பல இயக்குநர்கள் தவமிருக்கிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. கமல் ஹாஸன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் கமல் தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித்!!

அஜித்..

அஜித் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது.

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.’ 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.

மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார். அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. படத்தில் 5 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த படம், இது.

24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் டைரக்டு செய்திருந்தார். அவரே `மைனர் மாப்பிள்ளை’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.